அலபன் பண்டோபாத்யா- கோப்புப் படம் 
இந்தியா

‘‘3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ - மேற்குவங்க  முன்னாள் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மட்டுமின்றி மேற்குவங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர். மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

இந்த விவகாரம் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயாவை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.

ஆனால் அவரை அனுப்பி வைக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜ மறுத்து விட்டார். இதனிடையே அவர் நேற்று ஓய்வு பெற்றார். அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்தநிலையில் யாஸ் புயல் தொடர்பான பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் கூட்டத்தை புறக்கணிக்க காரணம் என்பது குறித்து 3 நாட்களுக்குள் தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT