இந்தியா

கரோனா  தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது என அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால், கரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட பலர் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்.

மேலும், இந்திய மக்களுக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு உறுதி கூறி வருகிறது.

இந்தநிலையில் நாட்டின் கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில் ‘‘44 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு தடுப்பூசியை வாங்கி விநியோகம் செய்கிறது. ஆனால் 18 வயது முதல் 44 வயது கொண்டவர்களுக்கு தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி விநியோகிக்கிறது.

மீதமுள்ள 50 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வசம் ஒப்படைத்து விட்டது. அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிக்கு அரசு ஒரு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு வேறு ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முரண்பாடு ஏன். 44 வயதுக்கு அதிகமானோர் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளிக்கலாம்.

ஆனால் கரோனா இரண்டாவது அலையில் 44 வயதுக்கு குறைவானவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. அதுபோலவே பற்றாக்குறை தொடர்பாகவும் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.

இந்த குளறுபடிகளை களைந்து நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT