அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று சமீபத்தில் பாபா ராம்தேவ் கூறியதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பின்னர், தனது கருத்துக்கு ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் ஹரித்வாரில் நடந்த யோகா முகாமில் பாபா ராம்தேவ் பேசியதாவது:
அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் எம்பிபிஎஸ், எம்.டி. படித்த டாக்டர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பக்கம் திரும்பி நமது முகாமில் கலந்து கொண்டுள்ளனர். சில அலோபதி டாக்டர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகி நமது பாதையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற முடிவு செய்துள்ளேன்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயாலாலைப் போல மதமாற்றம் செய்வது எனது நோக்கம் அல்ல. அலோபதி மருத்துவத்தில் இருந்து ஆயுர்வேத மருத்துவத்தின் மீது அவர்களின் நம்பிக்கையை மாற்றுகிறேன்.
இவ்வாறு பாபா ராம்தேவ் பேசினார்.