பிளாக் ஃபங்கஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று நோையக் குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்து 2 லட்சம் டோஸ்கள் இந்று அதிகாலை இந்தியா வந்து சேர்ந்தன.
இந்தியாவில் கரோனா தொற்று மெல்லக் குறைந்து வருகிறது. 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக்க குறைந்து 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
ஆனால், கரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்து அதிகம் எடுத்துக்கொண்டவர்களுக்கு உடல்நலம் குணமடைந்தபின், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் காரணமாக இந்த தொற்று ஏற்படுகிறது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றை கொள்ளை நோயாக அறிவித்துள்ளன.
கருப்பு பூஞ்சை தொற்று அதிகரி்த்துவரும் நிலையில் அதைத் தடுக்க உலக நாடுகளில் இருந்து ஆம்போடெரசின்-பி மருந்தை தேவையான அளவு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து ஆம்போடெரசின்-பி மருந்து 2 லட்சம் டோஸ்கள் இன்று காலை இந்தியா வந்து சேர்ந்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கருப்பு பூஞ்சை தொற்றைக் குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்து கிலீட்சயின்ஸ் நிறுவனத்திடம் இருந்து 2 லட்சம் டோஸ்கள் இந்தியா சென்றடைந்தன” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ உலகில் எங்கு ஆம்போடெரசின்-பி மருந்து கிடைத்தாலும் உடனடியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அமெரிக்காவில் கிலீட் சயின்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மருந்துகள் பெறப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தனர்.