ஹரித்துவார் கும்மேளா கரோனா சூப்பர் ஸ்பெரெட்டர் ( super spreader ) என்று கூறுவது நியாயமற்றது. ஹரித்துவாரில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 0.2 சதவீதம் பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது, போலீஸார் 0.5 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்று கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஏப்ரல் 1 முதல் 30ம் தேதிவரை கும்பமேளா திருவிழா நடந்தது. ஏறக்குறைய நாடுமுழுவதும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கங்கை நதியில் புனிதநீராடினர். இந்த கும்பமேளாவில் 3 புனித நீராடல்கள் நடந்தன.
கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் தீவிரமாகப் பரவி்க்கொண்டிருந்த சூழலில் கும்பமேளா நடத்தப்பட்ட பெரும் விவாதத்தை அறிவியல் வல்லுநர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. கரோனா சூப்பர் ஸ்பெர்ட்டர் என்று கும்பமேளாவை பலரும் விமர்சித்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி தலையிட்டு கும்பமேளாவில் கூட்டம் வருவதைத் தவிர்க்க வேண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி்க்கை விடுத்ததைத் தொடர்ந்து கும்பமேளாவை முன்கூட்டியே முடித்து நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் கும்பமேளாவால்தான் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது என்று கூறுவது நியாயமற்றது என்று கும்பமேளா தலைமை பாதுகாப்பு அதிகாரி காவல் ஐஜி சஞ்சய் குஞ்ஜியால் தெரிவித்துள்ளார்.
ஐஜி சஞ்சய் குஞ்சியால் அளி்த்த பேட்டியில் கூறியதாாவது:
நாட்டில் கரோனா 2-வது அலை மகாராஷ்டிரா, ஹரியானாவில் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் ஏப்ரல் மாதம் ஹரித்துவாரில் கும்பேமேளா நடத்தப்பட்டது. ஹரித்துவாரில் மாவட்ட புள்ளிவிவரங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தால் உண்மை புரியும்.
ஹரித்துவார் மாவட்டத்தில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30ம் தேதிவரை கரோனா புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபின் எந்த முடிவுக்கும் வர வேண்டும். அதைவிடுத்து கும்பமேளா கரோனா சூப்பர் ஸ்பெரெட்டர் ( super spreader ) எனக் கூறுவது நியாயமற்றது.
கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிவரை ஹரித்துவார் மாவட்டத்தில் மட்டும் 8.91 லட்சம் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன, அதில் 1,954 பேருக்கு மட்டுமே அதாவது 0.2 சதவீதம் பேர் மட்டுமே கரோனவில் பாதிக்கப்பட்டனர்.
கும்பமேளா திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏப்ரல் 30ம் தேதிவரை 88 போலீஸாருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டது அதாவது 0.5 சதவீதம் மட்டும்தான். அதனால்தான் கூறுகிறேன், கும்பமேளாவை சூப்பர் ஸ்பெரெட்டர் எனக் கூறுவது நியாயமற்றது.
ஆனால், கும்பமேளா நடந்த ஏப்ரல் 1 முதல் 30ம் தேதிவரை மொத்தம் 55,55,893 ஸ்வாப் மாதிரிகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டதில் 17,333 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கும்பமேளாவில் பங்கேற்க மார்ச் மாதத்தில் இருந்தே பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டனர். ஏப்ரல் 1ம் தேதி அன்று ஹரித்துவார் மாவட்டத்தில் 144 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது.
கும்பமேளாவில் ஹரித்துவாரில் புனிதநீராடலில் மொத்தம் 34.76 லட்சம் பேர் பங்கேற்றார்கள். இதில் ஏப்ரல் 12ம் தேதி முதல் நீராடலில் 21லட்சம் பேரும், ஏப்ரல் 14ம் தேதி 13.51 லட்சம் பேரும், சித்ரா பவுர்ணமி அன்று 25,104 பேரும் புனித நீராடினர். இந்த கணக்கு திருத்தப்படவும் இல்லை மாற்றப்படவும் இல்லை.
இவ்வாறு ஐஜி சஞ்சய் குஞ்சியால் தெரிவித்தார்.