இந்தியா

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர்

செய்திப்பிரிவு

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துஉற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மன்டாவியா தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 1.73 லட்சம் பேருக்கு கரோனா நோய் தொற்று பதிவு செய்யப்பட்டது. கடந்த 45 நாட்களில் இதுதான் குறைவான அளவாகும். இந்நிலையில், நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்குஅதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மன்டாவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஏப்ரல் மாதம் ரெம்டெசிவிர் மருந்தின் தினசரி உற்பத்தி 33 ஆயிரம் குப்பிகளாக இருந்த நிலையில், தற்போது தினசரி உற்பத்தி மூன்றரை லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20-லிருந்து60 ஆக உயர்ந்ததால், தற்போதுதேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் விநியோகம் உள்ளது. நோயாளிகளுக்கான தேவையைவிட,ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மாநிலங்களுக்கு வழங்கி வந்த ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து நிலைப்புத் தன்மையை உறுதி செய்ய,மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT