இந்தியா

பழமையான கோயில் இருந்த இடத்தில் பிரியாணி கடையை பார்த்து மேயர் அதிர்ச்சி

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் நெரிசல் மிகுந்த நகரமான கான்பூரில் பழமையான பகுதியாக சமன்கன்ச் உள்ளது. இப்பகுதியில் பழமையான சிறிய கோயில்கள் பல உள்ளன. இங்குள்ள தடவா மெஹல் பகுதியில் இருந்த ராதா கிருஷ்ணா கோயில் கடந்த மே 22-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

சுமார் 150 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மிகவும் பாழடைந்து விரிசல்களுடன் இருந்துள்ளது. இடிந்து விழலாம் என்ற அச்சம் காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக அக்கோயில் மூடப்பட்டிருந்தது. எனினும் கோயில் கட்டிடத்தின் இருபுறமும் சில கடைகள் இருக்கின்றன. கரோனா ஊரடங்கு காரணமாக அவை மூடப்பட்டிருந்ததால் கோயில் இடிந்து விழுந்தபோது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த கோயிலானது கான்பூரின் ஆசாத் நகரில் வசிக்கும் அனில்குமார் குப்தா குடும்பத்தினிரின் மூதாதை யர்களால் கட்டப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோயில் கட்டிடத்தில் பிரியாணி கடை வைத்திருந்தவர் உள்ளிட்ட சிலருடன் அனில் குமாருக்கு உயர் நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால் கோயில் இடிந்து விழுந்ததில் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, அரசு பதி வேடுகளின்படி கான்பூரின் கோயில்களை மாநகராட்சி அடையாளம் கண்டு வருகிறது. கான்பூர் பாஜக மேயர் பிரமிளா பாண்டே இரு தினங்களுக்கு முன் பதிவேடுகள் அடிப்படையில் ஒரு கோயிலை பார்வையிடச் சென்ற போது, கோயில் இருந்த இடத்தில் பிரியாணி கடை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கடையை உடனே அகற்றி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க உத்தரவிட்டார்.

அப்பகுதியில் பல ஆண்டு களாக திறக்கப்படாமல் இருந்த கோயிலில் மக்கள் குப்பைகளை கொட்டி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மேயர் பிரமிளா அதையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கான்பூர் மாநகராட்சி வட்டாரங்கள் கூறும்போது, “சுதந்திரத்திற்கு முன்பாக இப் பகுதியிலிருந்த 32 கோயில் கள் காணாமல் போய் விட்டன. முறையான பராமரிப்பின்றி இவை பாழடைந்து இடிந்து விழுகின்றன. பிறகு கோயிலின் நிலங்கள் அரசியல் கட்சி பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது பாஜக ஆட்சியில் இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்புகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT