கண்ணுக்கெட்டாத தூரத்தில் வரும் போர்க் கப்பலை ரேடார் கருவி மூலம் கண்டறியலாம். ரேடார் கருவி, ஒலி (ரேடியோ) அலைகளை செலுத்தி, கப்பலில் பட்டு பிரதிபலிக்கிற அலைகளின் மூலம் கப்பலின் இருப்பிடத்தை கண்டறியும். போர்க் காலத்தில் கப்பலின் இருப்பிடம் கண்டறியப் பட்டால் ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கப்படலாம். ரேடார் கருவி பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் உண்டு. இப்படிப்பட்ட ‘ரேடார் இலக்கு அணுகல்’ (Radar Homing) ஏவுகணைகள், தப்பிக்க திசை திரும்பும் கப்பல்களையும் துல்லியமாக தாக்கி அழிக்கும்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க போர்க் கப்பல்கள் தற்காப்பு நடவடிக்கையாக மின்னணு பதிலடி (Electronic Counter measure) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும். ரேடார் அலைகளை பிரதிபலிக்கும் துண்டுப் பொருட்கள் (Chaff) கப்பலில் இருந்து வானில் வீசப்படும். அப்படி வீசப்படும் எண்ணற்ற துண்டுப் பொருட்கள் காற்றில் பறந்து ரேடியோ அலைகளை பிரதிபலித்து ரேடார் கருவியை தவறாக வழிநடத்தும். இதனால் ஏவுகணை தாக்குதலில் இருந்து போர்க் கப்பல் தப்பிக்கும். பல உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பம் இது.
டிஆர்டிஓ உருவாக்கியுள்ள மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பத்தின் சிறப்பு, குறைந்த எண்ணிக்கையிலான துண்டுப் பொருட்களை காற்றில் வீசி ரேடார் மற்றும் ஏவுகணையில் இருந்து போர்க் கப்பலை காப்பாற்றுவதுதான். துண்டுப் பொருட்களை வீச ராக்கெட் (Chaff Rocket) பயன்படுத்தப்படும். குறைந்த, நடுத்தர, நீண்ட தூரம் சென்று துண்டுப் பொருட்களை வீசும் ராக்கெட் கருவிகளை மேம்பட்ட தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டிஆர்டிஓ நிறுவனத்தின் ‘பாதுகாப்பு ஆய்வகம் ஜோத்பூர்’ (டிஎல்ஜே) இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
சோதனை வெற்றி
அரபிக் கடல் பகுதியில் கப்பலில் இந்த ராக்கெட் சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. போர்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த மேம் பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க தேசிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை குறிக்கிறது. கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்யஇத்தொழில்நுட்பம் தொழில்நிறுவனத்துக்கும் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.