தெலங்கானா மாநிலத்தில் ஆக்சிஜன் டேங்கர் ரயிலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 6 ஆக்சிஜன் டேங்கர்களுடன் சரக்கு ரயில் ஒன்று கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் நோக்கி புறப்பட்டது. இந்த டேங்கர் ரயில் தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டம், கூசாரம் - சீக்குராய் இடையே செல்லும்போது, அதன் ஒரு டேங்கரில் தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக இதை கவனித்த ரயில்வே போலீஸார், ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தினர். உடனடியாக குறிப்பிட்ட ஆக்சிஜன் டேங்கர் கழற்றி விடப்பட்டது.
இதனிடையே தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஒரு டேங்கர் முழுவதும் சேதமடைந்தது. தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. இது குறித்து பெத்தபள்ளி ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.