இந்தியா

எனது கணவரை தவறாக சித்தரிக்கும் ‘கில்லிங் வீரப்பன்’ திரைப்பட பெயரை மாற்ற வேண்டும்: வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கோரிக்கை

இரா.வினோத்

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கிய 'கில்லிங் வீரப்பன்' என்ற திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும். மேலும் தனது குடும்பத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி தெரிவித்துள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ராம்கோபால் வர்மா 'கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் இந்தி,கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் எடுத்துள்ளார். கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி பெங்களூரு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பெங்களூ ருவில் 'தி இந்து' -விடம் கூறிய தாவ‌து:

கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் இயக்குநர் ராம்கோபால் வர்மா எனது கணவர் வீரப்பனின் வாழ்க்கையை 'பண்டிட் வீரப்பன்' என்ற பெயரில் இந்தி திரைப்படம் எடுப்பதாகவும், அதன் தமிழ் டப்பிங் உரிமையை எனக்கே வழங்குவதாகவும் கூறி என்னிடம் ஒப்பந்தம் செய்து, ரூ. 30 லட்சம் கொடுத்தார்.

ஆனால் தற்போது ஒப்பந்தத் துக்கு மாறாக படத்தின் பெயரை ‘கில்லிங் வீரப்பன்' என மாற்றியுள் ளார். மேலும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள மொழி களிலும் படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் வீரப்பனை மிகவும் கெட்டவராக சித்தரித்து, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். முழுக்க முழுக்க காவல் துறையின் பார்வை யில் படத்தை இயக்கியுள்ளார்.

எங்களது மூன்றாவது குழந் தையை வீரப்பனே அடித்து கொன்றது போல காட்சிப் படுத்தி யுள்ளார். ஆனால் உண்மையில் போலீஸாரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது, அந்த குழந்தை கீழே விழுந்து இறந்தது. இது தவிர என்னைப் பற்றியும், எனது குடும்பத்தார் பற்றியும் தரக்குறைவாக காட்டப்பட்டுள் ளதாக தெரிகிறது. எனவே படத்தை வெளியிடுவதற்கு முன் பாக எனக்கு காட்ட வேண்டும். நான் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே வீரப்பன் குறித்து வெளியான வனயுத்தம் திரைப் படம் மற்றும் சந்தனகாடு தொலைக் காட்சி தொடர் ஆகியவை நீதிமன்ற உத்தரவுபடி எனக்கு முதலில் காட்டப்பட்டன. நான் ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிய‌ பிறகே அவை வெளியாயின.

கன்னடத்தில் கில்லிங் வீரப்பன் வெளியாக பெங்களூரு நீதிமன்றத் தில் டிசம்பர் 17-ம் தேதி வரை இடைக்கால‌ தடை பெற்றுள்ளேன். இதே போல சென்னை, மும்பை நீதிமன்றங்களிலும் முறையிட்டு மற்ற மொழிகளிலும் திரைப்படம் வெளியாவதைத் தடுப்பேன்.

எனது கணவர் வீரப்பனின் பெயரை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ராம்கோபால் வர்மா, எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும். எனது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT