இந்தியா

புதிதாக டீசல் வாகனங்களை டெல்லியில் பதிவு செய்யக் கூடாது: மாசு அதிகரிப்பதை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

‘‘டெல்லியில் இனிமேல் புதிதாக எந்த டீசல் வாகனங்களையும் பதிவு செய்யக் கூடாது’’ என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மாசுபாடு அதிகரிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கார்களைவிட இருசக்கர வாகனங்களால்தான் அதிக மாசு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே டெல்லி மெட்ரோ ரயில்களின் சேவைகளை அதிகரிக்கவும், ஆட்டோக்களை அதிக நேரம் இயக்கவும் டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மாசுபாட்டை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இனிமேல் புதிதாக எந்த டீசல் வாகனங்களையும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகள் தங்கள் துறைகளுக்கு பயன்படுத்த டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக, டெல்லியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒற்றை இலக்க எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்கள் மறுநாளும் என மாற்றி மாற்றி சாலைகளில் அனுமதிப்பது குறித்த டெல்லி அரசின் திட்டம் குறித்து பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. மேலும், அதுபோல் செய்வதால் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது. பணம் இருப்பவர்கள் 2 கார்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று தீர்ப்பாயம் கூறியது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லியில் அரசுப் பேருந்துகள் அனைத்தும் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் இயங்கும் வகையில் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT