கரோனா தொற்றை எதிர்த்து போராட பல நாடுகளில் யோகா பயிற்சி உதவுகிறது என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் தெரிவித்துள்ளார்.
லேசான கரோனா தொற்றுக்குஆயுஷ் 64 என்ற மூலிகை மருந்தை சாப்பிடலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்தது. இந்த மருந்தை விநியோகிப்பது தொடர்பான பிரச்சாரத்தை மத்திய ஆயுஷ் துறைஅமைச்சர் பாத நாயக் நேற்று கோவா மாநிலம் பனாஜியில் தொடங்கி வைத்தார். அப்போது ஸ்ரீபாத நாயக் பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடத் தொடங்கியது. யோகாவின் பயன்கள் குறித்து பல நாடுகளிடமும் விளக்கப்பட்டது. இப்போது பல நாடுகளில் கரோனாதொற்றை எதிர்த்துப் போராட யோகா உதவுகிறது. இதை பல்வேறு நாடுகள் உணர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவின் பழமையான யோகா பயிற்சியின் பெருமையை உலக நாடுகளிடையே கொண்டு சென்றதன் மூலம் பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவராக விளங்குகிறார். இவ்வாறு பாத நாயக் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ‘‘கரோனா தொற்றுக்கு எதிராக ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களின் உதவியை கோவா அரசு பெற்றுவருகிறது. இதற்காக அரசு சார்பில்ஆயுஷ் கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.- பிடிஐ