கோப்புப்படம் 
இந்தியா

இறந்தவர்களைக் கங்கையில் வீசும் வழக்கம்: உ.பி., பிஹார் கிராமங்களில் பாரம்பரியமாகத் தொடரும் நிலை?

ஆர்.ஷபிமுன்னா

இறந்த உடல்களைக் கங்கையில் வீசும் வழக்கம் உத்தரப் பிரதேசம், பிஹாருக்குப் புதிதல்ல. இம்மாநில கிராமங்களில் இன்றும் அந்த வழக்கம் பாரம்பரியமாகத் தொடர்வதாகத் தெரிகிறது.

சில வாரங்களுக்கு முன் பிஹாரின் பக்ஸர் மாவட்ட கங்கையின் மஹாதேவா நதிக்கரையில் இறந்தவர்களின் உடல்கள் திரளாக மிதந்தன. இந்தச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவை கோவிட்-19 இரண்டாவது அலையில் பலியானவை எனப் புகாரும் எழுந்தன. ஆனால், அப்பகுதியின் கிராமவாசிகளுக்கு இந்தச் செய்தியால் எந்த பாதிப்பும் இல்லை.

ஏனெனில், இப்பகுதிகளின் கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களைக் கங்கை நதியில் விட்டுவிடுவது வழக்கமாக உள்ளது. இவற்றுடன், கோவிட்-19இல் பாதிக்கப்பட்டவர்கள் சற்று கூடுதலாகி விட, பார்ப்பவர்களுக்கு இது புதிதாக இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதன் பின்னணியில் பிஹாரின் பல்வேறு சம்பவங்களும், நம்பிக்கைகளும் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

பக்ஸரின் கிராமங்களில் ஒன்றான கங்கவுலிக்குப் பல வருடங்களுக்கு முன் போஜ்பூர் மாதியா எனும் ஒரு துறவி வந்திருக்கிறார். சுமார் 20,000 பேர் வசிக்கும் அக்கிராமத்தில் பலரும் துறவி மாதியாவின் பக்தர்களாகினர். சுற்றுவட்டார கிராமங்களிலும் கூடிய பக்தர்கள் அவரை ’ஹரே ராம் பிரம்மச்சாரி பாபா’ என்றழைக்கத் தொடங்கினர்.

இவர் தனது பிரசங்கங்களில் இறந்தவர்களின் உடல்களைக் கங்கையில் விட்டுவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம், மோக்ஷாதாயினியான கங்கை அந்த உடல்களின் தீராத பல ஆசைகளைத் தீர்த்து வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பக்ஸரின் நர்பத்பூர், கேசவ்பூர், பட்கா உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த வழக்கம் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு அருகிலுள்ள காஜிபூரின் கங்கை நதியிலும் உடல்கள் மிதந்தன. இதை ஒட்டியுள்ள கிராமங்களான ஷேர்பூர், கஹாமர் ஆகிய கிராமங்களில் ஜல சமாதி அடையும் வழக்கம் உள்ளதாகத் தெரிகிறது. இதற்குத் தடை இருப்பதால் அதையும் மீறி பல சமயம் கங்கையில் உடல்கள் வீசப்பட்டு விடுவது நிகழ்ந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வாரணாசியின் பண்டிதரான ஷிவ்தயாள் பாண்டே கூறும்போது, ''இதுபோல், கங்கையில் உடல்களை விடுவது அக்குடும்பத்தின் மற்றும் அவர்கள் வசிக்கும் கிராமத்தின் ஆன்மிக நம்பிக்கை ஆகும். இதில், சில உடல்களின் இறுதிக் காரியங்களைச் செய்வது எப்படி எனக் கிராமப் பஞ்சாயத்துகளே முடிவு செய்கின்றன. இன்றும் கூடத் தங்கள் உறவுகளின் இறந்த உடல்களை எடுத்து வரும் சிலர், அதற்கான இறுதிக் காரியங்களைச் செய்கின்றனர்.

பிறகு அதைச் சிதையில் வைக்காமல் கங்கையில் விட்டுவிடும்படி கோருகின்றனர். இவை கங்கையின் நீர்வரத்தைப் பொறுத்து அதில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். நீர் குறைந்தால் இந்த உடல்கள் கரைகளில் ஒதுங்கி சர்ச்சையாகின்றன. கரைகளின் ஓரங்களில் புதைக்கப்படும் உடல்களும் வெளியேறி, கங்கையில் மிதப்பதுண்டு'' என்று தெரிவித்தார்.

உ.பி. மற்றும் பிஹாரின் சில கிராமங்களில் பாம்புக் கடி, விபத்துகளில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் மர்மமான முறையில் இறந்த உடல்களை வாழை மட்டைகளில் சுற்றிக் கங்கையில் விடும் வழக்கமும் உள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

இந்த வகையில், பிரம்மச்சாரிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பவதிப் பெண்களின் உடலையும் கங்கையில் விடும் பழக்கம் இருந்தது. காலத்தின் மாற்றத்தால் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வந்ததன் காரணமாக அவை குறைந்துவிட்டன. இந்த செயல்கள் மீது உ.பி.யின் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டு, தடை செய்யப்பட்டன. பிறகு கங்கையைச் சுத்தமாக்கும் திட்டங்களாலும் உடல்களை வீசுவது தடுக்கப்பட்டது.

துறவிகளுக்கு மட்டும் அனுமதி

எனினும், இந்து மதத் துறவிகளின் இறந்த உடல்களைச் சிதைகளில் வைக்காமல், கங்கையில் விடும் வழக்கம் தொடர்கிறது. ஜல சமாதி என்றழைக்கப்படும் இந்த முறைக்கு மட்டும் அரசு அனுமதி உள்ளதாகக் கருதப்படுகிறது.

இறக்கும் நிலையை நெருங்கும் துறவிகளுக்கு மடங்கள் இருப்பின் அதில் சமாதி அடைந்து கொள்கிறார்கள். இதுபோல், மடங்கள் இல்லாத துறவிகளின் உடல்கள் இறந்த பின் ஜல சமாதியாகக் கங்கையில் விடப்படுகின்றன.

SCROLL FOR NEXT