பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

நாடுமுழுவதும் குறைந்து வரும் கரோனா தொற்று: நோயாளிகள் எண்ணிக்கை 23,43,152 ஆக குறைந்தது

செய்திப்பிரிவு

நாட்டில் தொடர்ந்து 12-ஆவது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவான அளவில் கரோனா நோய்த்தொற்று குறைந்துள்ளது.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 23,43,152 ஆக உள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி முதல் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 76,755 குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 8.50% ஆகும்.

நாட்டில் தொடர்ந்து 12-ஆவது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவான அளவில் நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

15-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,459 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதிதாக குணமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி 73,095 ஆக பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,48,93,410 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 90.34% ஆக உயர்ந்துள்ளது.

நாளொன்றில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 20,70,508 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33.90 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 10.42 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதியின் விதம் 9.00 சதவீதமாகவும் என்று பதிவாகியுள்ளது. இந்த விழுக்காடு, 4 நாட்களாகத் தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20.57 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை மொத்தம் 29,38,367 முகாம்களில் 20,57,20,660 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT