தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும், மக்கள் பலியாவது குறித்தும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், மக்களின் கோபம் அதிகரித்துவருகிறது, சரியான நேரத்தில் மக்கள் மத்திய அரசை திருப்பி அடிப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 12 சுற்றுப் பேச்சு நடத்தியும் விவசாயிகள், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையிலும் கூட விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலைக் காரணமாக வைத்து விவசாயிகள் போராட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப மத்திய அரசு முயல்வதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசு கொண்டு வந்த பேரழிவு வரும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.
மத்திய அரசு புதிய திருப்பமாக, கரோனா வைரஸ் காலத்துக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்படுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, கரோனா வைரஸ் காலத்திலும் அழிவுதரக்கூடிய வேளாண் சட்டங்கள் நீண்டகாலமாக இருப்பது சரியல்ல.
மக்களின் சேவனகாக மத்திய அரசு இருந்தால், பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிதாக ஆலோசனைகள் நடத்த வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.
ப.சிதம்பரம் மற்றொரு ட்விட்டர் பதிவில் தடுப்பூசி குறித்து மத்திய அரசு வெளியிட்டு வரும் கணக்கீட்டை விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தி உண்மையென்றால் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தடுப்பூசி உற்பத்திக்கும், உண்மையான சப்ளை அளவுக்கும் இடைவெளி இருக்கிறது.
மாநில அரசுகளிடம் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதாக மத்திய அரசு பொய்கூறி வருகிறது. ஆனால் பல மாநில அரசுகள் கூறுவது என்னவென்றால், தங்களிடம் தடூப்பூசி இருப்பு இல்லை என்கிறார்கள். இதில் யார் பொய் உரைக்கிறார்கள்?
தடுப்பூசி தயாரிப்பு மற்றும் சப்ளை குறித்து தவறான எண்ணிக்கையை உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் வெளியிடும் தவறான செயலுக்கு மத்திய அரசு உடன்படுகிறதா? மக்கள்தான் துரதிர்ஷ்டமாக பலியாகிறார்கள். மக்கள் இதை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோபம் அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மத்திய அரசை மக்கள் திருப்பி அடிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.