யாஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று ஒடிசா சென்ற பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.
வடக்கு ஒடிசா- மேற்குவங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக ஒடிசாவில் 6 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 11.5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்தன. தொடர்ந்து நிவாரணப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் பிரதமர் மோடி யாஸ் புயல் மற்றும் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று காலை ஒடிசா சென்றார். புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது புயல் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் ஆய்வு செய்கிறார். மேலும் மேற்குவங்க மாநிலத்திலும் யாஸ் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளார்.