பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் மாநகராட்சி சார்பில் வார்டு தோறும் கரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் சிக்பேட்டை தர்மராயா கோயில் தெருவில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ள மாநகராட்சி ஊழியர்கள் கட்டாயப்படுத்தினர்.
அதற்கு இளைஞர்கள் மறுத்துள்ளனர். இதில் கோபமடைந்த 3 மாநகராட்சி ஊழியர்கள், இளைஞர்களை அடித்து, உதைத்தனர். மேலும் இந்தியில் பேசிய இளைஞர்களை கன்னடத்தில் பேசுமாறு தாக்கி, கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா கூறும்போது, '' நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். யாரையும் கட்டாயப்படுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடாது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே இளைஞர்களை தாக்கிய மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.