இந்தியா

பலாத்கார வழக்கில் தண்டனை முடிந்து இன்று விடுதலையாகும் இளம் குற்றவாளிக்கு புது வாழ்க்கையை தொடங்க ரூ.10 ஆயிரம் வழங்க பரிந்துரை

செய்திப்பிரிவு

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தண்டனை முடிந்து இன்று விடுதலை ஆக உள்ள இளம் குற்றவாளி, டெய்லராக புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு வசதியாக ரூ.10 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலைக்கு ஒருநாள் முன்னதாக, அந்த இளம் குற்றவாளி ஏதோ ஒரு ரகசிய இடத்துக்கு சீர்திருத்தப் பள்ளியிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகார வட்டா ரங்கள் தெரிவித்தன.

சிறார் நீதி விதிமுறைகளின்படி, இந்த இளம் குற்றவாளிக்கு ‘விடுதலைக்குப் பிந்தைய திட்ட’த்தை (மறுவாழ்வு) தயாரிக்க மாவட்ட சிறார் பாதுகாப்பு பிரிவு அதிகாரி தலைமையில் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது பரிந்துரையை சமர்பித்துள்ளது.

இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையில், “சிறையிலிருந்து விடுதலையாகும் இந்த நபர், புதிய அடையாளத்துடன் புதிய வாழ்க்கையை தொடங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் இவர் மீது வன்முறை சம்பவம் நிகழாமல் தடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு.

சீர்திருத்தப்பள்ளியில் இருந்த காலத்தில் இந்த நபர் சமையல் மற்றும் துணி தைத்தல் (டெய்லரிங்) ஆகிய தொழில்களை கற்றுக்கொண்டார். எனினும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அவருக்கு டெய்லரிங் தொழில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று இக்குழு கருதுகிறது.

எனவே, இந்தத் தொழில் தொடங்குவதற்காக அவருக்கு டெல்லி அரசு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கலாம். தொண்டு நிறுவனம் மூலம் டெய்லரிங் இயந் திரம் கிடைக்க எங்கள் துறை ஏற்பாடுசெய்யும்” என கூறப்பட்டுள்ளது.

இதுபோல, சம்பந்தப்பட்ட இளம் குற்றவாளியிடமும் தனது எதிர்கால திட்டம் குறித்து நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் தனது கருத்தை தெரிவிக்கவில்லை. அவர் தனது திட்டத்தை தெரிவித்தால் இந்த இரு திட்டங்களும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆனதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லி சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இந்த இளம் குற்றவாளிக்கு சிறார் சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT