இந்தியா

யாஸ் புயல்; துல்லியமான முன்னறிவிப்பு, உரிய நேரத்தில் மீட்பால் பாதிப்பு குறைந்தது

செய்திப்பிரிவு

துல்லியமான முன்னறிவிப்பு, மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கியது, உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகிய காரணங்களால் யாஸ் புயலினால் குறைந்த அளவிலான உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பின் மதிப்பீடு மற்றும் இது சம்பந்தமான விஷயங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர்.

தலா 46 குழுக்கள் என மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் மொத்தம் 106 குழுக்கள், 1000 மக்களை மீட்டதாகவும், சாலைகளில் விழுந்திருந்த சுமார் 2500 மரங்கள்/ கம்பங்களை அப்புறப்படுத்தியதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.‌

பாதுகாப்புப் படைகளான ராணுவம் மற்றும் கடலோரக் காவல் படை, புயலினால் சிக்கியிருந்த மக்களை பத்திரமாக மீட்டனர், கடற்படையும் விமானப் படையும் தயார் நிலையில் இருந்தன.

யாஸ் புயலால் ஏற்பட்ட சேதாரம் குறித்து மாநிலங்கள் மதிப்பீடு செய்து வரும் நிலையில், முதற்கட்ட அறிக்கையின்படி, துல்லியமான முன்னறிவிப்பு, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கியது, மாநிலங்கள் மற்றும் மத்திய முகமைகளின் வாயிலாக உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகிய காரணங்களால் குறைந்த அளவிலான உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளன.
அதேவேளையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலைத்தொடர்பு சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டன.

புயலினால் ஏற்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொண்ட மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த முகமைகளின் சிறப்பான பங்களிப்பை பிரதமர் சுட்டிக் காட்டியதோடு, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்புவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு முகமைகளுக்கு அறிவுறுத்தினார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், எரிசக்திச் செயலாளர், தொலைத்தொடர்பு செயலாளர், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் மற்றும் இதர உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT