உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தனது தாயின் மரணச் செய்தியை கேட்ட பிறகும் தனது பணி நேரம் முடிந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரபாத் யாதவ் (33). மெயின்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தஇவர் கடந்த 9 ஆண்டுகளாக இப்பணியில் இருந்து வருகிறார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம், மாவட்ட ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டன. அப்போது அவற்றின் ஓட்டுநர் பணிக்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபாத்தும் ஒருவர். பிரபாத்தின் கரோனா பணி நவம்பர் வரை தொடர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியபோது சில ஆம்புலன்ஸ்கள் ரெகுலர் பணிக்கு திருப்பி விடப்பட்டன. பிறகு கடந்த ஏப்ரலில் பிரபாத்துக்கு மீண்டும் கரோனா பணி தரப்பட்டது.
இந்நிலையில் பிரபாத்தின் சொந்த கிராமத்தில் இருந்த அவரது தாயார் கடந்த 15-ம் தேதி மரணம் அடைந்தார். பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அழைப்புகள் வந்துகொண்டே இருந்த அந்த பிஸியான இரவில் பிரபாத், பணியிலிருந்து பாதியில் செல்லவில்லை. இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே 200 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள தனது கிராமத்துக்கு புறப்பட்டார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார்.
இதுகுறித்து மதுராவின் 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் அஜய் சிங் கூறும்போது, “தாயாரின் இறுதிச் சடங்குக்கு பிறகு சில நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு பிரபாத்திடம் கூறினேன். ஆனால் அவர் நோயாளிகளுக்கு உதவ விரும்பியதால் பணிக்குத் திரும்ப சம்மதித்தேன். பிரபாத் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர். எப்போதும் உதவியாக இருப்பார்” என்றார்.
உ.பி.யில் ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது வாகனப் போக்குவரத்து இல்லை. பிரபாத் சொந்த ஊர் செல்ல அவருக்கு அஜய் சிங்தான் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தார். அன்று இரவே மதுரா திரும்பிய பிரபாத், மறுநாள் காலையில் பணியில் சேர்ந்துவிட்டார்.
கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் முந்தைய கரோனா பணியின்போது, அவரது தந்தை கரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். அப்போதும் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பிரபாத் பணிக்குத் திரும்பினார்.
“எனது அம்மா என்னை விட்டுச் சென்றுவிட்டார். என்றாலும் என்னால் சிலரை காப்பாற்ற முடிந்தால் அவர் பெருமைப்படுவார்” என்கிறார் பிரபாத்.