குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் காந்தி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு விஜய் ரூபானி கூறியதாவது:
குஜராத்தில் கரோனா புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறிப் பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. மாநிலத்தில் உச்ச அளவாக கடந்த ஏப்ரல் 30-ல் புதிய நோயாளிகள் எண்ணிக்கை 14,605 ஆக இருந்தது. தற்போது ஒவ்வொரு நாளும் புதிய தொற்று சுமார் 3,200 ஆக பதிவாகி வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை (மே 28) முதல், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் உள்ளிட்ட 36 நகரங்களில் இரவு ஊரடங்கு இனி 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த நகரங்களில் பகல் நேர ஊரடங்கு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசு விழிப்புடன் உள்ளது. இதை எதிர்கொள்வதற்கான விரிவான செயல்திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு விஜய் ரூபானி கூறினார்.
குஜராத்தில் நேற்று முன்தினம் புதிய நோயாளிகள் எண்ணிக்கை 3,255 ஆக பதிவானது. 44 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 7,94,912 ஆகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,665 ஆகவும் உயர்ந்தது. -பிடிஐ