தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால். இவர் கடந்த 2013ம் ஆண்டு கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ள மின் தூக்கியில் (லிப்ட்) வைத்து, பெண் நிருபரை பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து தருண் தேஜ்பாலை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் வழக்கு கோவாவின் மபுசாவில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் வாதப்பிரதிவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தருண் தேஜ்பாலை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தீர்ப்பின் முழு விவரம் நேற்று வெளியானது.
தீர்ப்பில் நீதிபதி ஷாமா ஜோஷி கூறியுள்ளதாவது: தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தருண் தேஜ்பால் மீது புகார் தெரிவித்த பெண் எந்தவிதமான நெறிமுறை நடத்தையையும் நிரூபிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணைப் போல அவர் நடந்து கொள்ளவில்லை. பதிவில் உள்ள ஆதாரங்களை பரிசீலித்ததில் சந்தேகத்திற்குரிய நன்மை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படுகிறது.
ஏனெனில் புகார் அளித்த பெண்ணின் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் மற்றும் உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. பெண்ணின் “நடத்தை” ஒரு முக்கிய காரணியாக இருந்தது, அது அவரது வழக்கைக் குறைமதிப்புக்கு உட்படுத்தியது.
பல உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை வழக்கறிஞரின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றன. எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாலும், மருத்துவ பரிசோதனைக்கு செல்ல அரசு தரப்பு மறுத்துவிட்டதாலும் மருத்துவ ஆதாரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.-பிடிஐ