இந்தியா

ஒரு புகைப்படத்தால் மாறிய சிறுவனின் வாழ்க்கை

பி.கே.அஜித்குமார்

ஒரு புகைப்படம் ஒரு சினிமா உருவாகக் காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் படத்துடன் சம்பந்தப்பட்ட 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.

அசாதுல் இஸ்லாமுக்கு (வயது 10) அன்றைய தினம் பேராச்சரியம் அளிப்பதாகவே இருந்தது. காரணம் தான் இதற்கு முன் பார்த்திராத நபர் தன் கைகளில் சிலபல பரிசுகளை திணித்ததோடு தனது கல்விக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியதே.

சூழல் புரியாமல் நின்றிருந்த இஸ்லாமுக்கு மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் அனைத்தையும் விளக்கினார். இந்த சந்திப்புக்காக தான் ஓராண்டாக காத்திருந்ததாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 22, 2014-ல் 'தி இந்து' ஆங்கில நாளிதழில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தனது ஆட்டுக்குட்டிகளுடன் வாழைமரங்களால் செய்யப்பட்ட ஓடத்தில் தப்பும் அசாதுல் இஸ்லாமின் புகைப்படம் வெளியாகியிருந்தது. இப்புகைப்படத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழின் அசாம் மாநில புகைப்பட நிருபர் ரிது ராஜ் கோன்வர் எடுத்திருந்தார்.

அந்தப் புகைப்படமே பின்னாளில் ஜெயராஜ் ஓட்டல் என்ற திரைப்படத்தை இயக்க மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது. கேரள திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைவிழாக்களில் அத்திரைப்படத்துக்கு விருது கிடைத்தது. சிறுவன் அசாதுல் இஸ்லாம் ஓடத்தில் செல்லும் காட்சியை ஜெயராஜ் தனது படத்தில் அப்படியே சித்தரித்திருந்தார்.

இந்நிலையில்தான் அண்மையில் அசாதுல் இஸ்லாமை சந்தித்துள்ளார் இயக்குநர் ஜெயராஜ். அசாம் மாநிலம் மோரிகாவோன் மாவட்டத்தில் குச்சானி என்பதே சிறுவன் அசாதுல் இஸ்லாம் வசிக்கும் கிராமம்.

இந்த சந்திப்பு குறித்து அசாமில் இருந்து இயக்குநர் ஜெயராஜ் தி இந்துவிடம் தொலைபேசியில் பேசும்போது, "சிறுவன் அசாதுல் இஸ்லாமை சந்தித்தது என் வாழ்வில் மிகச்சிறப்பான தருணம். அச்சிறுவனின் கல்வித் தேவை உட்பட அனைத்து விதமான பொருளாதாரச் செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அதுதவிர நான் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனமானது சிறுவனின் கிராம மக்கள் அனைவரது உடல்நலத்தையும் பேண முன்வந்துள்ளது" என்றார்.

சில நேரங்களில் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு புகைப்படம் வலிமையானது என்பதை உணர்த்தியிருக்கிறது ரிது ராஜ் கோன்வாரின் இப்புகைப்படம்.

SCROLL FOR NEXT