இந்தியா

கர்நாடகாவில் துணை முதல்வரை நியமிக்க முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு

இரா.வினோத்

கர்நாடகத்தில் துணை முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அளித்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் ஆளும் கட்சியான‌ காங்கிரஸ் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது குறித்தும் மாநில தலைவர் ஜி.பரமேஷ்வர் தலைமையில் பெங்களூரில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா,முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, தரம்சிங், வீரப்ப மொய்லி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் பதவி

அப்போது க‌ர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் வெறும் 9 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியதற்கு முதல்வரும், தோல்வியடைந்த தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்களுமே காரணம். அவர்களின் செயல்பாடுகள் குறித்து கட்சி மேலிடம் ஆராய வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அதே போல தேவகவுடாவின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து காங்கிரஸில் சேர்ந்த சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் கொடுத்ததால்,அவர் பழைய காங்கிரஸாரையும் மூத்த தலைவர்களையும், தொண்டர் களையும் மதிப்பதில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கிறார் என்ற புகாரும் கூறப்பட்டுள்ளது.

மாநில தலைவர் ஜி.பரமேஷ்வர் கூறுகையில்,''ஆட்சியில் இருப் பவர் கட்சியின் விருப்பத்துக்கு மாறாகவும், தன்னிச்சையாகவும் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இன்னும் சிறப்பாக அமையும் வகையில் துணை முதல்வரை நியமிக்குமாறு மாநில பொறுப்பாளரான திக்விஜய் சிங்கிடம் கட்சி மேலிடம் ஆலோசனை வழங்கியுள்ளது. அமைச்சரவையில் நிரப்பப் படாமல் இருக்கும் 4 துறைகளுக்கு உடனடியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

சித்தராமையா சீற்றம்

இதற்கு சித்தராமையா பதிலளிக்கையில்,''கர்நாடகாவில் கடந்த ஓராண்டு காலமாக‌ காங்கிரஸ் கட்சியின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, துணை முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஏற்கெனவே மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங்கிடம் தெரிவித்துள்ளேன். அமைச்சரவையையும் இப்போதைக்கு விரிவாக்க முடியாது.

மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் கட்சியை மனதில் வைத்தே மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர். அதனால்தான், இத்தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 2009 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை கூடுதலாக 2 இடங்களை மாநிலத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. அதற்கு மாநிலத்தின் நல்லாட்சியே காரணம்'' என்றார்.

ராஜினாமா செய்ய கோரிக்கை

இதனிடையே சனிக்கிழமை பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன் கூடிய, மாநில தலைவர் ஜி.பரமேஷ்வரின் ஆதரவா ளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தராமையாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், பரமேஷ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இல்லையென்றால், சித்த ராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத் தினர்.

SCROLL FOR NEXT