இந்தியா

கோயிலுக்குள் செல்லவிடாமல் ஆர்எஸ்எஸ் தடுத்ததா? - ராகுல் காந்தி புகாருக்கு பாஜக மறுப்பு

பிடிஐ

டெல்லியில் ரயில்வே துறையினரால் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேற்கு டெல்லி, ஷகுர் பஸ்தி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகளை ரயில்வே துறையினர் நேற்று முன்தினம் இடித்து தள்ளி னர். இந்த சம்பவத்தில் 6 மாத குழந்தை ஒன்று பலியானது.

இந்நிலையில் குடிசைகள் இடிக்கப்பட்ட ஷகுர் பஸ்தி பகுதிக்கு நேற்று சென்ற ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது, “நாங்கள் ஆட்சியில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இந்த சம்பவத்துக்கு மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசுமே காரணம். உங்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளும் எடுப்போம். உங்களுக்காக நாங்கள் போராடுவோம். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவேன்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடந்த சம்பவத்துக்கு மோடி அரசும் கேஜ்ரிவால் அரசுமே காரணம். ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதில் தீவிரமாக உள்ளனர். இதற்கு பதிலாக அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளித்திட அவர்கள் முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள் ளார்.

இதனிடையே அசாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தன்னை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடுத்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த வெள்ளிக்கிழமை நான் அசாம் சென்றிருந்தபோது அங்குள்ள பார்பீதா கோயிலுக்குள் செல்ல விரும்பினேன். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்னை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து விட்டனர். கோயில் வாயிலில் பெண் காவலரை நிறுத்தி, நான் கோயிலில் நுழைய முடியாது என கூறச் செய்தனர். பின்னர் மாலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கோயிலை விட்டுச் சென்ற பிறகு நான் கோயிலுக்கு சென்று வந்தேன். இந்த நிலையில்தான் பாஜக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

பாஜக மறுப்பு

இந்நிலையில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அசாமில் கோயிலுக்கு செல்லும்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் தடுக்கப்பட்டதாக ராகுல் கூறியுள்ளார். இது ஜோடிக்கப்பட்ட பொய். ஏற்கெனவே அக்கட்சி எம்.பி. செல்ஜா, துவாரகா கோயிலில் தான் தடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அவர் கூறியது பொய் என நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டது” என்றார்.

பாஜக செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் அசாமில், கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறுவது வெட்கக்கேடு” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT