லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவுகள். இதன்நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் காலமானார். இதையடுத்து, தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக உள்ளபிரபுல் கோடா படேல், லட்சத்தீவுகளின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரபுல் கோடா படேல், நிலவுரிமை சட்டத்தின்படி லட்சத்தீவை பூர்வீகமாக கொண்டதாய், தந்தையருக்கு பிறப்பவர்கள்மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற உத்தரவை தளர்த்தி உள்ளார். யார் வேண்டுமானாலும் இங்கு இடம் வாங்க வழிவகை செய்யும் இந்த உத்தரவு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் லட்சத்தீவுகளின் பிரதான உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றுக்கு தடைவிதிப்பதற்கான முன்னெடுப்புகள், அதனைத் தொடர்ந்து கடலோர மக்களின் குடில்கள் அகற்றம், மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கலைப்பு என பல்வேறு மாற்றங்களை பிரபுல் படேல் கொண்டு வந்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்ததலைவர் அஜய் மாக்கன் நேற்றுகூறும்போது, "சிவில் சேவையிலும்,ராணுவ சேவையிலும் சிறிதும் அனுபவம் இல்லாத பிரபுல் படேலை, அங்கு நிர்வாக அதிகாரியாக மத்திய அரசு நியமித்தது தவறு. யூனியன் பிரதேசத்தின் கலை, கலாச்சாரத்தை அழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் போட்டுள்ள புதியஉத்தரவுகளை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவரது உத்தரவுகளால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துவிடும். மேலும் லட்சத்தீவுன் கலாச்சாரமும் நாசமாகும்.
இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கடிதம்எழுதியுள்ளார்.எனவே, பிரபுல் கோடா படேலை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றார். - பிடிஐ