இந்தியா

அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க பழிவாங்கும் நடவடிக்கை கூடாது: பிரதமரை சந்தித்தபின் நிதிஷ் குமார் தகவல்

பிடிஐ

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நிதிஷ் குமார் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் புகார் கூறுகிறது. அக்கட்சி இவ்வாறு கூறுவதற்கு அர்த்தம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கட்சி ஏன் அவ்வாறு கூற வேண்டும்? இதுபோன்ற சூழலில் இதுபோன்ற அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை.

அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது. ஜனநாயக நடைமுறையில், தங்கள் நலனுக்காக பணியாற்று வதற்காகவே ஆட்சி அதிகாரத்தை கட்சிகளுக்கு பொதுமக்கள் வழங்குகிறார்கள். எதிர்க்கட்சி களை ஒடுக்குவதற்காக அல்ல.

பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். இதில் வேறெதுவும் இல்லை. பிஹார் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, தனது வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT