இந்தியாவுக்கு தடுப்பூசி விற்பனை செய்வது தொடர்பாக மத்தியஅரசுடன் அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், பஞ்சாப் அரசுக்கும், டெல்லி அரசுக்கும் தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது என்று மாடர்னா மற்றும் பைஸர் நிறுவனங்கள் தெரிவித்தன. மத்திய அரசுடன் மட்டுமே நேரடிாயக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
இந்தசூழலில் தடுப்பூசி விற்பனை குறித்து மத்திய அரசுடன் பைஸர் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.
பைஸர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று விடுத்த அறிக்கையில் “ இந்தியாவில் எங்கள் தடுப்பூசியை விற்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் விரைவில் பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம். இதற்கு மேல் அதிகமான விவரங்களை வெளியிட முடியாத சூழல் இருக்கிறது.
மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசிகளை சப்ளை செய்வோம். தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வது பிரித்துக் கொடுப்பது போன்ற உள்நாட்டு அளவிலான திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை ஆலோசனைப்படி மத்திய அரசு முடிவு எடுக்கும்.
பெருந்தொற்று தொடங்கியது முதல், தடுப்பூசியை விரைவாக தயாரிக்க வேண்டும், அவசரத் தேவைக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதில் பைஸர் நிறுவனம் தீவிரமாக இருந்தது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் இரு உற்பத்தி மையத்தை அமைத்து தயாரித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.