பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸி | கோப்புப்படம் 
இந்தியா

பிஎன்பி வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸியைக் காணவில்லை: ஆன்டிகுவா போலீஸார் விசாரணை

பிடிஐ


பஞ்சாப் நேஷனல் வங்கியில்(பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் வாழ்ந்துவரும் வைர வியாபாரி மெகுல் சோக்ஸி திடீரென காணவில்லை என்று ஆன்டிகுவா போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஆன்டிகுவா மற்றும் பர்படாஸ் தீவில்தான் மெகுல் சோக்ஸி தங்கியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப்பின் மெகுல் சோக்ஸியைக் காணவில்லை என்று ராயல் போலீஸ் ஃபோர்ஸ் ஆஃப் கரீபியன் ஐலாந்து தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பினார் .

மெகுல் சோக்ஸியின் கூட்டாளியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் உள்ளார், இவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணியில் சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 23்ம்தேதி ஜாலி ஹார்பருக்கு மெகுல் சோக்ஸி சென்றார். அப்போதிருந்து மெகுல் சோக்ஸியைக் காணவில்லை. இதை மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞரும் விஜய் அகர்வாலும் உறுதி செய்துள்ளார்.

மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் அகர்வால் கூறுகையில் “ மெகுல் சோக்ஸி காணவில்லை என்றசெய்தி வெளியானதிலிருந்து அவரின் குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். ஆன்டிகுவா போலீஸார் விசாரித்து வருகின்றனர். சோக்ஸியின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஆன்டிகுவா போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த 23ம் தேதி மெகுல் சோக்ஸி காரில் செல்வதைக் கண்டோம். அதன்பின் ஜாலி ஹார்பருக்கு சோக்ஸி சென்றுள்ளார். அங்கு சென்றவர் அதன்பின் காணவில்லை. இந்திய தொழிலதிபர் மெகுல் சோக்ஸியின் புகைப்படத்தை தீவின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்துவரும் நோக்கில் மத்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஆன்டிகுவா அரசு மெகுல் சோக்ஸியின் குடியுரிமையை ரத்து செய்யும் பணியில் இறங்கியது. ஆனால், ஆன்டிகுவா அரசின் செயலுக்கு எதிராக மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றார்.

SCROLL FOR NEXT