யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறுவதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு இந்திய வானிலை துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவான காற்றழுத்தம், வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து யாஸ் புயலாக மாறியுள்ளது.
இது வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறும் வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரத்தை 26ம் தேதி காலை சென்றடையும். பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே இது மே 26ம் தேதி மதியம் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
கனமழை எச்சரிக்கை:
ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
ஒடிசா கடலோர பகுதியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பூரி, கட்டாக், கேந்திரபாரா, பாலாசோர் உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இன்று கன மழையும் பெய்யும்.
யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறுவதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு இந்திய வானிலை துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.