பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

நாளை முழு சந்திர கிரகணம்;  வடகிழக்குப் பகுதிகளில் காணலாம்

செய்திப்பிரிவு

நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் பகுதி கிரகணமாகக் காணலாம்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:

வரும் புதன் கிழமை, மே 26 அன்று வானில் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இந்தியாவில் வட கிழக்கு பகுதிகள்‌(சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள், ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில கடற்கரைப் பகுதிகளில் சந்திர உதயத்திற்குப் பிறகு, பகுதி சந்திரகிரகணம், குறுகிய காலத்திற்கு தெரியும்.

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடலை ஒட்டிய இடங்களில் இந்த சந்திர கிரகணம் தெரியும்.

இந்த பகுதி சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கும். முழு சந்திர கிரகணம், மாலை 4:39 மணிக்குத் துவங்கி, 4:58 மணிக்கு நிறைவடையும். பகுதி சந்திர கிரகணம், மாலை 6:23 மணிக்கு முடிவடையும்.

அடுத்த சந்திர கிரகணம், 2021, நவம்பர் 19 அன்று இந்தியாவில் தெரியும். அது, பகுதி சந்திர கிரகணமாக நிகழும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT