தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருக்கும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடியின் படத்துக்கு பதிலாக மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு மாநில அரசு சார்பில்தான் நிதி அளிக்கப்பட்டு தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுகிறது. ஆதலால் பிரதமர் மோடியின் படத்துக்கு பதிலாக சான்றிதழலில் மாநில முதல்வர் படம் அச்சிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதுபோன்று மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் படம் தடுப்பூசி சான்றிதழில் அச்சிடப்பட்டது, இரண்டாவதாக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் படம் அச்சிடப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் வழங்கப்படும் தடுப்பூசி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆதலால் அந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருக்கிறது. ஆனால், 18 முதல் 44வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி அந்தந்த மாநில அரசுகள் செலவில் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநில அரசு கொள்முதல் செய்வதற்கு எதற்காக பிரதமர் மோடியின் படம் பொறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோ நிருபர்களிடம் கூறுகையில் “ இதில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட சான்றிதழ் தரப்படுகிறது.
ஆனால், 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசியை மாநில அரசு கொள்முதல் செய்கிறது, ஆதலால், மாநில முதல்வர் படத்தை சான்றிதழில் வைக்கிறோம். இதில் சர்ச்சைக்கு என்ன இருக்கிறது. இதை சர்ச்சையாக்கினால், தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் ஏன் அச்சிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் பாஜக எதிர்க்கட்சித் தலைவர் தராமல் கவுசிக் கூறுகையில் “ மத்திய அரசின் திட்டங்களை சத்தீஸ்கர் எடுத்துக்கொண்டு நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறது. 18 வயது முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு தடுப்பூசியை மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் முடிவு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதித்ததும் மத்திய அரசின் முடிவு. பிரதமர் மோடியின் படத்தை நீக்கும் முன் ஆலோசித்திருக்க வேண்டும். மட்டமான அரசியலும், விளம்பரமும் செய்யக்கூடாது” எனத் தெரிவித்தார்.