நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வீட்டை ஏலத்தில் எடுக்க முயன்ற முன்னாள் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை மருந்து கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் மும்பையில் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான, 7 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சொத்துகளை தற்போது ஏலத்தில் விட அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து முன்னாள் பத்திரிகையாளரான எஸ்.பாலகிருஷ்ணன் என்பவர் தெற்கு மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிமின் வீட்டை ஏலத்தில் எடுக்க முடிவு செய்தார். முன்னதாக கடந்த வியாழக்கிழமை அவர், அந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில், ஏலத்தில் பங்கேற்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று அவர் கூறும்போது, ‘‘குழந்தைகள் மற்றும் மகளிர் நலனுக்காக பாடுபட்டு வரும் தேஷ் சேவா சமிதி என்று எனது தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் அந்த வீட்டை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக அந்த வீட்டை நேரில் சென்று பார்த்தேன்.
உடனடியாக எனது மொபைலுக்கு தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷக்கீலிடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் வந்தது. அதில் ‘ஏலத்தில் பங்கேற்றால் உனக்கு என்ன நேரிடும் என்பதை நன்கு அறிந்திருப்பாய்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் நான் அச்சப்படவில்லை. போலீஸிலும் புகார் அளிக்கவில்லை’’ என்றார்.
அந்த வீட்டின் அடிப்படை ஏலத்தொகையாக ரூ.1.18 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 9-ம் தேதி கொலாபாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏலம் நடைபெறுகிறது.