டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில், இளம் குற்றவாளியின் தண்டனை காலம் முடிந்துவிட்டதால் அவரை விடுவிக்கத் தடையில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் நாளை விடுதலையாவார் என்று தெரிகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு, தெற்கு டெல்லி யில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பிசியோதெரபி மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா என பின்னர் பெயரிடப்பட்டார்) தனது நண்பருடன் நின்றிருந்தார். அந்த வழியாக தனியார் பேருந்தில் வந்த இளைஞர்கள், அவர்களை அழைத்துச் சென்றனர். பின்னர், மாணவியின் நண்பரை பயங்கர மாகத் தாக்கினர். மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்தனர். பின்னர் இருவரையும் சாலையில் வீசிச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், 13 நாட்கள் கழித்து சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி உயிரிழந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இளம் குற்றவாளிக்கு சிறார் சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றச் செயலுடன் ஒப்பிடும் போது இத்தண்டனை போது மானது இல்லை என விமர்சனம் எழுந்தது. பலாத்காரம் உள்ளிட்ட கடும் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை வழக்கமான நீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டும். இதற்கு ஏற்ப சிறார் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்ற கருத்தும் வலுத்தது.
இதனிடையே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக் கப்பட்ட இளம் குற்றவாளியின் தண்டனை காலம் வரும் 20-ம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் இளம் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளம் குற்றவாளியின் தண்டனை காலம் முடிந்து விட்டதால் அவரை விடுவிக்க தடையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
“இது தீவிரமான பிரச்சினை என்பது உண்மைதான். இதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் தற்போதுள்ள சட்டப்படி டிசம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு அந்த நபரை (இளம் குற்றவாளி) சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருக்க முடியாது. தண்டனை பெற்றவரின் மறுவாழ்வுத் திட்டம் குறித்து அவருடனும் அவரது பெற்றோர் மற்றும் மத்திய அரசுடனும் சிறார் நீதிமன்றம் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நீதிமன்றத்தில் கூறும் போது, “இளம் குற்றவாளியை விடுவிப்பது சமூகத்துக்கு நல்ல தல்ல. எனினும் அவர் விடுவிக்கப் பட்டால் அவரது முகத்தை வெளிப் படுத்த வேண்டும்” என்றார்.
இந்த வார தொடக்கத்தில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இளம் குற்றவாளியின் மறுவாழ்வு தொடர்பாக தெளிவாக திட்டம் வகுக்கப்படும் வரை அவரை விடுதலை செய்வதை நிறுத்திவைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதில், பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களை விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட மற்ற 5 பேரில் ராம்சிங் என்பவர் திஹார் சிறையில் இறந் தார். முகேஷ், வினய், பவன், அக் ஷய் ஆகிய 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் இவர் களின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது என்ன நீதி?: தாய் குமுறல்
தீர்ப்பு குறித்து மாணவியின் தாயார் ஆஷா தேவி நேற்று கூறும்போது, எனது மகளின் 3-வது நினைவு நாளில் குற்றவாளி விடுதலையாவதை பார்க்கிறோம். இத்தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இது என்ன நீதி? என்றார்.
டெல்லி பலாத்கார சம்பவத்தில் இறந்த மருத்துவ மாணவி, பயமற்றவர் என்ற பொருளில் ‘நிர்பயா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். மாணவியின் தாயார் ஆஷா தேவி, தனது மகளின் பெயர் ‘ஜோதி சிங்’ என்று சமீபத்தில் அறிவித்தார். அவள் பெயரை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர்தான் வெட்கத்தால் தலை குனியவேண்டும் என்று கூறியிருந்தார்.