மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பரில் அவரது கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து திரிணமூல் காங்கிஸ் சார்பில் எம்.பி.க்களாக இருந்த சுவேந்துவின் தந்தை சிசிர் குமார் அதிகாரி, தம்பி திப்யேந்து அதிகாரி ஆகிய இருவரும் திரிணமூல் கட்சியுடன் உறவை துண்டித்துக் கொண்டனர்.
இதில் சிசிர் குமார் அதிகாரி மட்டும் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தாவை, சுவேந்து அதிகாரி சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எனினும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்
சியை தக்க வைத்துக் கொண்டது. மம்தா மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலை
வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வன்முறை ஏற்பட்டது. இதில் பாஜகவினர் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 77 எம்எல்ஏக்களுக்கும் கடந்த வாரம் பல்வேறு பிரிவுகளில் மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் எம்.பி.க்கள் சிசிர் குமார், திப்யேந்து ஆகியோருக்கு மத்திய அரசு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்கியுள்ளது.