பிளாக் ஃபங்கஸ் தொற்று எனச் சொல்லப்படும் கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) தொற்றிலிருந்து மக்களைக் காக்க உடனடியாக நடவடிக்கை தேவை, அவர்களுக்குத் தேவையான மருந்துகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சிகிச்சையின்போது அதிகமான ஸ்டீராய்டு மருந்து எடுத்திருந்தவர்களுக்கும், சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
ஏற்கெனவே கரோனா வைரஸ் 2-வது அலையைச் சமாளிக்க ஒவ்வொரு மாநில அரசும் போராடி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் மேலும் சிக்கலையும், தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் இதுவரை நாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதி்க்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்று நோயை கொள்ளை நோய் தடுப்பு பட்டியலில் சேர்க்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பிளாக் ஃபங்கஸ் தொற்று நோயைத் தடுக்க விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சப்ளையை மாநிலங்களுக்கு உறுதி செய்ய வேண்டும். கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும்
பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆம்போடெரசின்-பி மருந்துதான் அத்தியாவசியமானது. இந்த மருந்தை சந்தையில் பற்றாக்குறையாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆதலால், ஆம்போடெரசின்-பி மருந்தை போதுமான அளவு இருப்பு வைக்கவும், அதிகமாக உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுஷமான் பாரத் காப்பீடு திட்டம் பாதுகாப்பு அளிக்காது. ஆதலால் அவர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டக் காப்பீடு வழங்க வேண்டும்.
கொள்ளை நோய் தடுப்புச் சட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றை சேர்க்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். ஏராளமான மக்கள் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதி்க்கப்பட்டு வருவதால், விரைந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.