கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜுக்கும், பொதுப்பணித்துறை பினராயி விஜயன் மருமகன் முகமது ரியாஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் முதல்வர் பினராயி விஜயன் தன்வசம் உள்துறை, லஞ்ச ஒழிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளை வைத்துக்கொண்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது.
மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை ஒத்திவைத்த பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் 20-ம் தேதி எளிமையான முறையில் நடந்த நிகழ்ச்சியில் 2-வது முறையாக முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்றார்.
கேரளாவில் அமையும் புதிய அரசில் 21 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்எல்ஏ மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்கப்பட உள்ளது.
21 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த விவரங்களை முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் முகமது ஆரிஃப்கானிடம் நேற்று வழங்கினார்.
சுகாதாரத்துறை
அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுகாதாரத்துறை ஆரண்முலா தொகுதி எம்எல்ஏவும் பத்திரிகையாளருமான வீணா ஜார்ஜுக்கு வழங்கப்பட்டது. கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு பெருந் தொற்றுகளையும், சுகாதாரப் பிரச்சினைகளையும் திறம்பட சமாளித்து வெற்றி கண்ட கே.கே.சைலஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கவில்லை.
அவர் நிர்வகித்த சுகாதாரத்துறை வீணா ஜார்ஜுக்கு வழங்கப்பட்டதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுகாதாரத்துறையுடன் சேர்த்து, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் துறையும் வீணா ஜார்ஜுக்கு வழங்கப்பட்டுளளது.
பினராயி மருமகன்
பினராயி விஜயனின் மருமகனும், முதல்முறையாக எம்எல்ஏ ஆகிய முகமது ரியாஸுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை வழங்கப்பட்டுள்ளது. கடகம்பள்ளி சுரேந்திரன், சுகாகரன் ஆகியோர் இதற்கு முன் பொதுப்பணித்துறையை நிர்வகித்து, சிக்கல் இல்லாமல் கொண்டு சென்றனர்.
முல்லைப்பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அணைகள் தொடர்பான சி்க்கல், அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகாவுடன் நீடிப்பதால் அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிதிஅமைச்சகம்
கேரளாவின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராகும், பொருளாாதார வல்லுநராகவும் கருத்தப்படும் தாமஸ் ஐசக்கிற்கும் இந்தமுறை அமைச்சரவையில் இடமில்லை. அவருக்குப் பதிலாக நிதித்துறை முதல்முறையாக எம்எல்ஏவாகிய கே.என். பாலகோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பால கோபால் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
தாமஸ் ஐசக்கின் சிந்தனையில் உருவாகிய கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியத்தை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார், வழிநடத்தப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரளாவில் கரோனா வைரஸ் பரவல், மக்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்ேவறு நிதிச்சிக்கலுடன் அரசு இருப்பதால் அதை எவ்வாறு சமாளித்து மீட்டு வரப்போகிறார் என்பது பாலகோபால் மீதான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பி ராஜு
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பி.ராஜீவுக்கு சட்டம் மற்றும் தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றுள்ள ராஜீவ் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேமம் தொகுதி வெற்றியாளர்
கேரளவில் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே இருந்தநேமம் தொகுதியில் பாஜகவை வீழ்த்திய வி.சிவன் குட்டிக்கு கல்வித்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பினராயி விஜயன் அரசில் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் சிறப்பாகச் செயல்பட்டதால், இந்த முறை வீணா ஜார்ஜ், சிவன்குட்டி மீது கவனம் விழுந்துள்ளது.
தேவசம்போர்டு
கண்ணூரின் வலிமை மிகுந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் எம்.வி. கோவிந்தனுக்கு உள்ளாட்சித்துறை மற்றும் கலால்வரித்துறை வழங்கப்பட்டுள்ளது.
5-வது முறையாக எம்எல்ஏவாகிய கே.ராதாகிருஷ்ணணுக்கு முதல்முறையாக தேவசம்போர்டு துறை வழங்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்தினருக்கு அர்ச்சகராக பிரபல கோயில்களில் பணியாற்ற முதல்முறையாக உத்தரவிட்டது பினராயி விஜயன் அரசுதான்.
இந்த முறை தலித் சமூக்ததைச் சேர்ந்த ஒருவரை, தேவசம்போர்டு அமைச்சராக நியமித்துள்ளது. கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான பாரம்பரியக் கோயில்கள், சபரிமலை ஐயப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு கே.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு முக்கியத்துவம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.விஜயராகவன் மனைவி டாக்டர் ஆர்.பிந்துவுக்கு உயர்கல்வித்துறையும், சமூக நீதித்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பி்ல வெற்றி பெற்ற ஜே.சிஞ்சுராணிக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. 21 பேர் கொண்ட அமைச்சரவையில் 3 பெண் அமைச்சர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிற துறைகள்
கே. ராஜனுக்கு வருவாய் துறையும், ஜி.ஆர்.அனிலுக்கு உணவு மற்றும் பொதுவழங்கல் துறையும், ரோஸி அகஸ்டினுக்கு நீர்பாசனத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
சாஜி செரியனுக்கு மீன்வளத்துறை, கலாச்சாரத்துறையும், வி.என்.வாசவனுக்கு கூட்டுறவு மற்றும் பதிவாளர்துறையும், வி.அப்துர்ரஹ்மானுக்கு சிறுபான்மை விவகாரமும், பி.பிரசாத்துக்கு வேளாண் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின் துறை கே. கிருஷ்ணமூர்த்திக்கும், வனத்துறை ஏ.கே.சசீதரனுக்கும், போக்குவரத்துறை அமைச்சகம் ஆண்டனி ராஜுக்கும், துறைமுகம், அருங்காட்சியகம்,தொல்லியத்துறை அகமது தேவர்கோவிலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.