அரபிக் கடலில் உருவான டவ் தே புயலை தொடர்ந்து வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகி வருகிறது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் 26-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
யாஸ் புயல் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தகவல்களை உற்றுநோக்க வேண்டும். புயலின் பாதையில் உள்ள மருத்துவமனைகளை இடம் மாற்றுவது குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும். நிலைமையை கையாள மாநில அரசுகளுக்கு மத்திய சுதாதார அமைச்சகம் அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக உள்ளது.
மாநில அரசுகள் சுகாதாரத் துறைக்கான அவசர கால நடவடிக்கை மையம் அல்லது கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும். பொறுப்பு அதிகாரியை அடையாளம் கண்டு சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை திட்டமிட வேண்டும். இங்குதங்கவைக்கப்படும் மக்கள்கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு விரைவு பரிசோதனை வசதி செய்ய வேண்டும். அனைத்து மருத்துவ மனைகளிலும் அவசர காலத் துறை எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
புயலால் தகவல் தொடர்பு பாதிக்கும் என்பதால் மருத்துவ மனைகளுக்கு செயற்கைகோள் தொலைபேசி வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.