இந்தியா

ஆந்திராவில் கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து: மருத்துவமனைகளை காலி செய்து வரிசையில் நின்ற கரோனா நோயாளிகள்

என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் கரோனா நோயாளிகள், கரோனா வராமல் தடுக்க நினைப்பவர்கள், கரோனாவால் மூச்சு விட முடியாமல் அவதிப்படும் நோயாளிகள் ஆகியோருக்காக மூன்று வகையான ஆயுர்வேத மருந்துகளை அனந்தய்யா என்பவர் வழங்கி வருகிறார்.

வெள்ளெருக்கு, நாக இலை, வேப்ப இலை, வில்வம், இளம் மா தளிர், பட்டை, கிராம்பு, ஜாதிகாய், பனைவெல்லம், தேன், இஞ்சி, மிளகு, மஞ்சள் உட்பட பல்வேறு மூலிகை இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 3 வகை மருந்துகள் இங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், கண்களில் சொட்டு மருந்தும் வழங்கப்படுகிறது. இதனால் மிகவும் ஆபத்தான நிலையில், ஐசியுவில் உள்ள கரோனா தொற்று நோயாளிகள் கூட வெறும் அரை மணி நேரத்தில் மிகவும் சுலபமாக சுவாசிக்க முடிகிறது எனக் கூறப்படுகிறது.

கரோனா தொற்று உள்ள பலருக்கு, இம்மருந்தை சாப்பிட்ட 48 மணி நேரத்தில் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் ‘நெகட்டிவ்’ வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து தகவல் பரவியதால் ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கிருஷ்ணப் பட்டினம் பகுதிக்கு படை எடுக்க தொடங்கி விட்டனர்.

தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே மூலிகை தயாரிக்க முடிவதால், இதனை அனந்தய்யா மற்றும் அவரது சீடர்கள் இலவசமாக வழங்கி வந்தனர். ஆனால், நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனை உட்பட பல தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பலர் மருத்துவமனைகளை காலி செய்துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் வர தொடங்கி விட்டனர். நேற்று அங்கு சுமார் 50 ஆயிரம் பேர் மருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த கிராமத்தை நோக்கி வர ஆரம்பித்துவிட்டன. கூட்டம் அதிகம் சேர்வதால் கரோனா அதிகரித்துவிடும் என அஞ்சிய அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸ்களும், மற்ற வாகனங் களும் ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே முள் செடிகளை வெட்டி சாலையில் போட்டனர். இதனால், நோயாளிகளின் உறவினர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஆங்காங்கே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கரோனா தொற்றை அந்த மருந்து உண்மையில் குணப்படுத்துகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ஐசிஎம்ஆர் குழுவினருக்குஉத்தரவிட்டார்.

இதன்படி, அக்குழுவினர் கிருஷ்ணபட்டினத்திற்கு நேற்று சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையில் அனந்தய்யா வின் கரோனா மூலிகை அற்புதமாக செயலாற்று வதாக நெல்லூர் எம்எல்ஏ கோவர்தனும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT