மும்பையில் பணியாற்றும் உத்தரப் பிரதேச கிராமத்து ஆண்கள், வருடம் ஒரு முறை வீடு திரும்பும்போது எய்ட்ஸ் சோதனை செய்வது அவர்கள் மனைவிமார்களால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த ஆண்களின் குடும்பத்தினர் கிராமப் பஞ்சாயத்தினரும் முழு ஆதரவளித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவின் அருகிலுள்ள மாவட்டம் பத்தேபூர். இதன் கிராமங்களில் ஒன்றான உதய் சராயில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஆண்கள் மும்பையில் பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வருடம் ஒருமுறை பண்டிகைக்காக மட்டுமே வீடு திரும்புவது வழக்கம். அப்போது அவர்கள், ஹெச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் மனைவிமார்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். அக்கிராமத்தில் எச்ஐவி வைரஸ் பாதிப்பு அதிகமாகி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2005 முதல் 2015 வரை பதேபூர் மாவட்டத்தில் 357 பேர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ள்ளனர். இதில் உதய் சராய் கிராமத்தை சேர்ந்தவர்கள் 48 பேர் ஆகும். கடந்த 2005-ம் ஆண்டு இங்கு நடந்த உடல் பரிசோதனை முகாமில் 52 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களில் ஐந்து குடும்பங்களில் உட்பட 44 பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். எனவே அப்போது முதல் மும்பையில் பணியாற்றும் கணவர் வீடு திரும்பும்போது எய்ட்ஸ் சோதனை செய்த பின்னரே அவர்களின் மனைவி வீடுகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது குறித்து ’தி இந்து’விடம் அக்கிராமப்புறப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அங்கன்வாடி பணியாளரான கியான் ஸ்வரூபா தொலைபேசியில் கூறுகையில், ‘வருடம் முழுவதும் மனைவியை பிரிந்து தனியாக வாழும் கிராமத்து ஆண்களில் மும்பை விலை மாதர்களுடன் தெரியாமல் உறவு வைத்துக் கொள்பவர் அதிகமாக இருந்தனர். இதனால், அவர்கள் குடும்பம் முழுவதும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்த காலங்கள் உண்டு. இதனால் கிராம பெண்கள் சோதனையை கட்டாயமாக்கி உள்ளனர். இதற்கு அவர்களின் மாமியார் மற்றும் நாத்தனார்களும் ஆதரவளிக்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.
இதுபோல் எந்த ஒரு பிரச்சனையும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் உபி பஞ்சாயத்துகளில் இந்த கட்டாய சோதனை வழக்கும் வந்திருந்தது. இதை ஒருமுறை விசாரித்த பஞ்சாயத்து, இந்த மனைவிமார்கள் செய்வது சரிதான் என்றதுடன், புதிதாக மணம் புரியும் இளைஞர்களுக்கு எய்ட்ஸ் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும். தற்போது 12 பேர் உதய் சராயில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.