இந்தியா

மாநில முதல்வர்கள் கைப்பாவையா?- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக 10 மாநிலங்களை சேர்ந்த 54 மாவட்ட அரசு அலுவலர் களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள் அனைவரும் கைப்பாவை போல அமர்ந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல்வர்கள் பேச அனுமதி வழங்கப்படவில்லை.

நான் 20 கேள்விகளோடு காத்திருந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட பேச அனுமதிக்கவில்லை. நாங்கள் கொத்தடிமைகளா? முதல்வர்களின் கருத்தை கேட்டறிய பிரதமர் விரும்பவில்லை. முதல்வர்களுடன் பேசுவதற்கு அவர் அஞ்சுகிறார். கூட்டாட்சி தத்துவம் முழுமையாக சிதைக்கப்படுகிறது.

மிகப்பெரிய கட்டிடங்களை கட்ட மத்திய அரசுக்கு நேரம்இருக்கிறது. ஆனால் முதல்வர்களின் கருத்துகளை, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய நேரம் இல்லை. நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் இயல்பாக இருக்கிறார். மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை, எவ்வளவு கரோனா தடுப்பூசிகள் தேவை என்று பிரதமர் கேட்கவில்லை. பெயரளவுக்கு கூட்டம் நடத்துகிறார்.

மேற்குவங்கத்தில் கரோனா தொற்று அதிகரித்திருப்பதாக கூறி மத்திய அரசு சார்பில் சிறப்பு குழு அனுப்பப்பட்டது. தற்போது பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் கரோனா நோயாளிகளின் உடல்கள் கங்கையில் மிதந்து செல்கின்றன. அந்த மாநிலத்துக்கு ஒரு குழுவைகூட அனுப்பவில்லை.

மேற்குவங்கத்துக்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த மாதம் 24 லட்சம் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு சார்பில் தனிப்பட்ட முறையில் ரூ.60 கோடியை செலவு செய்து தடுப்பூசிகளை வாங்கியுள்ளோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.-பிடிஐ

SCROLL FOR NEXT