கோப்புப் படம் 
இந்தியா

ஒரு எம்எல்ஏ-வை தேர்ந்தெடுக்க 15 ஆசிரியர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பதா?- இடைத்தேர்தல் பணியால் மனைவியை இழந்த கணவன் ஆதங்கம்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கம்மம்பாட்டி மோகன் ராவின் மனைவி சந்தியா (35). இவர் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி நாகார்ஜுன சாகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டார். சந்தியாவுக்கு அதன் பின்னர் கரோனா தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது கணவர் மோகன்ராவ் கூறும்போது, “கரோனா தொற்று பரவி வரும் வேளையில் இடைத்தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன? சில மாதங்கள் கழித்து தேர்தலை நடத்தி இருக்கலாம் அல்லவா? அதற்குள் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்கலாம்.

ஆனால், தெலங்கானாவில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் காரணமாகவே எனது மனைவி உயிரிழந்தார். இதனால், எங்களுடைய 8 வயது மகளும், நானும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களை போல் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இடைத்தேர்தலால் நூற்றுக் கணக்கானோருக்கு கரோனா தொற்று பரவியது. இதில் முதல்வர் சந்திரசேகரராவும் ஒருவர். பல அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், பொதுமக்களுக்கு தொற்று பரவியது. 15 அரசு ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு, அவர்களுக்கு தொற்று பரவி உயிரிழந்துள்ளனர்” என்றார்.

ஆசிரியர் சந்தியா ஏப்ரல் 17-ம் தேதி தெலங்கானா இடைத்தேர்தலில் பணியாற்றினார். இவருக்கு ஏப்ரல் 20ம் தேதி கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன் பின்னர் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சந்தியா மே 8-ம் தேதி உயிரிழந்தார்.

இவர் ஹாலியா எனும் பகுதியில் தேர்தல் பணியாற்றினார். இதனை தெலங்கானா உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தெலங்கானா இடைத்தேர்தலில் பணியாற்றிய 500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி உள்ளது. 15 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT