கர்நாடகா, உத்தராகண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரா, ஹரியாணா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு 1897-ம் ஆண்டின் பெருந்தொற்று சட்ட விதிகளின்படி கருப்பு பூஞ்சை நோயை இணைத்துள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற அறிக்கையும் அனுப்பியுள்ளது.
இதன்படி தெலங்கானா அரசு கருப்பு பூஞ்சை நோயை நேற்று பெருந்தொற்று வரிசையில் இணைத்தது. "சர்க்கரை நோய் அதிகமாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் மூக்கின் தோல் நிறம் மாறும், கண் பார்வை மங்கலாகும், சுவாசக் கோளாறு ஏற்படும். இதற்கு முன்கூட்டியே சிகிச்சை பெற வேண்டும்" என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.