இந்தியா

ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி), ரியல் எஸ்டேட் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு மக்களவையில் பெரும் பான்மை பலம் உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இதனால் மக்களவையில் நிறைவேறும் மசோதாக்கள் மாநிலங்களவையில் முடங்குகின்றன.

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் 6 மசோதாக்களையும் மாநிலங்களவையில் 7 மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முக்கியமாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜிஎஸ்டி), ரியல் எஸ்டேட் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதாக்கள் மாநிலங்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனையில் இருந்தன. அவை குறித்த பரிந்துரைகளை மாநிலங்களவையில் தேர்வுக் குழு ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டது.

மேலும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம் தொடர் பான மசோதா, தீர்ப்பாய சட்ட திருத்த மசோதா, அறக்கட்டளை திருத்த மசோதா, போனஸ் திருத்த மசோதா, தொழிற்சாலைகள் திருத்த மசோதா, ஊழல் தடுப்பு திருத்த மசோதா, ஊழலை சுட்டிக் காட்டுபவரை பாதுகாக்க வகை செய்யும் மசோதா, காசோலை மோசடி தடுப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக் களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளும் கட்சி தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT