இந்தியா

ஜேட்லி வழக்கு தொடர்ந்தது தவறு: கேஜ்ரிவாலுக்காக ஆஜராகும் ராம் ஜெத்மலானி கருத்து

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.

மேலும், அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் கேஜ்ரிவால் மற்றும் 5 பேரின் வழக்கறிஞராக தாம் வாதாட உள்ளதாக ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

இதனை அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்துக்கு முன்வைத்துள்ள ராம்ஜெத்மலானி, அவதூறு வழக்கை தொடர்ந்து அருண் ஜேட்லி மிகப் பெரிய தவறிழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

முன்னதாக, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக அருண் ஜேட்லி இருந்த 13 ஆண்டு காலத்தில், பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து தன் மீது தவறான அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அஷுதோஷ், குமார் விஸ்வாஸ், ராகவ் சத்தா, சஞ்சய் சிங், தீபக் பாஜ்பேயி ஆகிய நிர்வாகிகள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT