பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மைய மாக மாற்றி உள்ளார்.
பங்களாவின் அறைகளின் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண் டர்கள், மருந்துகள் ஆகியவை தயாராக உள்ளன. அந்தப் புகைப் படங்களை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார். கரோனா சிகிச்சை மையத்துக்கு தனது கட்சியின் பெயரைக் குறிப்பிடும் வகையில் ‘ஆர்ஜேடி கரோனா சிகிச்சை மையம்’ என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ பதிவையும் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘‘படுக்கைகள், ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் தவிக் கும் நிலையில், எனது அரசு பங்களாவை சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்தேன். இது அரசு பங்களா.
எனவே, கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ள முதல்வர் நிதிஷ் குமாரை கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நிதிஷ் குமாருக்கு கடிதமும் அவர் எழுதியிருப்பதோடு அரசுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.