இந்தியா

அமைச்சர்களின் சொத்து விவரங்களை ஜூலை இறுதிக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும்: புதிய நடத்தை விதிகள் வெளியீடு

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை ஜூலை இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில்

அமைச்சர்களுக்கான புதிய நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்துகள், பங்கு பத்திரங்களின் மதிப்பு, ரொக்க கையிருப்பு, தங்க நகைகள், வருமான வரி தாக்கல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இரண்டு மாதங்களுக்குள் அதாவது ஜூலை இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி அமைச்சர்கள் தங்களின் ஆண்டு வருமானம், சொத்து விவரங்களை பிரதமரிடம் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர்கள் நடத்தும் தொழில்கள், அவர்களின் இதர நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் தகவல் அளிக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்புடைய தொழில் துறைகளில் அமைச்சரோ ,அவரது குடும்பத்தினரோ ஈடுபடக் கூடாது. உதாரணமாக அரசுத் துறைகள் சார்பில் வழங்கப்படும் லைசென்ஸ், பெர்மிட், டெண்டர் உள்ளிட்ட பணிகளில் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் விலகி இருக்க வேண்டும். அரசுக்கு எவ்வித சொத்தையும் பொருளையும் அமைச்சர்கள் விற்பனை செய்யக்கூடாது.

அமைச்சரின் குடும்பத்தினர் அரசுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புள்ள தொழில்களைத் தொடங்கும்போது அதுகுறித்து பிரதமரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அரசியல், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் உள்பட யாரிடம் இருந்தும் அமைச்சர்கள் பரிசுப் பொருள்களை பெறக் கூடாது.

அமைச்சரின் மூலமாக ஏதாவது ஓர் அமைப்புக்கு பணம், காசோலை அளிக்கும்போது அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்பு, நபரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

பொதுநிகழ்ச்சிகளில் வாள்,கேடயம் உள்ளிட்ட பொருள்களை அமைச்சர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் தடையில்லை.

எனினும் பரிசுப் பொருட்களின் விலை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டால் கருவூலத்தில் அந்த பொருளின் விலை குறித்து ஆய்வு செய்யப்படும். குறிப்பிட்ட பொருள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அதற்குரிய தொகையை கருவூலத்தில் செலுத்தி அந்தப் பொருளை அமைச்சர் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்பத்தினர் வெளிநாட்டு அரசுப் பணிகளை ஏற்றுக் கொள்ள கூடாது. பிரதமரின் ஒப்புதல் இன்றி இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, வெளிநாட்டு நிறுவனங்களிலோ அமைச்சரின் குடும்பத்தினர் பணியாற்றக் கூடாது.

அமைச்சரின் குடும்பத்தினர் ஏற்கெனவே வெளிநாட்டு அரசுப் பணியில் இருந்தால் உடனடியாக பிரதமரிடம் தகவல் தெரிவிக்கவேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் இறுதி முடிவு எடுப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT