இந்தியா

காற்றழுத்தமாக மாறி வடகிழக்காக நகரும் டவ்-தே புயல்: மிக பலத்த மழை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டவ்-தே புயல் தெற்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்தமாக மாறியது. இதனால் உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.

அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து டவ்-தே" புயல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது தற்போது மேலும் வலுவிழந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெற்கு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள குஜராத் பகுதிகளில காற்றழுத்தமாக மாறியுள்ள “டவ்-தே” புயல், கடந்த 6 மணி நேரங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (மே 19, 2021) தென் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், உதய்பூரிலிருந்து (ராஜஸ்தான்) 30 கிலோமீட்டர் தெற்கு- தென் மேற்கு பகுதியிலும், குஜராத் மாநிலத்தின் தீசா பகுதியிலிருந்து 170 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையிலும் நிலை கொண்டிருந்தது.

இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கிழக்கு ராஜஸ்தானில் இன்று ஒரு சில இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும், பஞ்சாப், கிழக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT