டெல்லியின் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க லங்கூர் எனும் கருங்குரங்குகளின் உருவக் கட் அவுட்களை வைத்து மத்திய பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்துள்ளனர்.
டெல்லியில் அதிகரித்த கரோனாவை சமாளிக்க பல்வேறு பகுதிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றாக சத்ரபூரின் ராதே ஸ்வாமி பியாஸ் மைதானத்தில் 500 படுக்கைகள் அமைந்துள்ளன.
இதற்கு பாதுகாப்பாக ஐடிபிபி எனும் இந்தோ திபேத்தியன் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளனர். இந்த பகுதியில் அதிகமுள்ள குரங்குகளால் அப்படையினரால் விரட்டி சமாளிக்க முடியவில்லை.
இவை, நோயாளிகளின் உணவுகளை சிகிச்சை முகாமினுள் புகுந்து அபகரித்துச் செல்கின்றன. மேலும், மருத்துவர், செவிலியர்களின் அதிக விலைமதிப்புள்ள பிபிஈ கிட் பாதுகாப்பு உடைகளையும் எடுத்துச் சென்று கிழித்து போடுகின்றன.
இதை சமாளிக்க முடியாமல், இந்தோ திபேத் படையினர் திணறியுள்ளனர். பிறகு அப்படையின் சார்பில் குரங்குகளை விரட்ட ஒரு புதிய உத்தி கையாளப்பட்டுள்ளது.
இதில் சாதாரணக் குரங்குகள் லங்கூர் கருங்குரங்குகளை கண்டு அஞ்சுவது கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கரோனா பரவல் காலத்தில் கருங்குரங்குகளை கொண்டுவருவது சிரமம்.
எனவே, அதை போன்ற உருவப்படங்களுடன் கட் அவுட்கள் ஆங்காங்கே வைத்துள்ளனர். இவை உண்மையானவை என அஞ்சிய குரங்குகள் அப்பகுதியில் வருவதை நிறுத்தி விட்டதாகக் கருதப்படுகிறது.