சிங்கப்பூரிலிருந்து வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்நாட்டிலிருந்து வரும் உருமாறிய கரோனா வைரஸ்தான் 3-வது அலைக்குக் காரணமாகப் போகிறது. இந்த வைரஸால் குழந்தைகளுக்கு பேராபத்து நேரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரத்தில் இருக்கிறது. முதல் அலையில் முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பைச் சந்தித்தனர். 2-வது அலையில் இளைஞர்கள், நடுத்தர வயதினர் உயிரிழக்கின்றனர், அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்துவரும் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்று பல்வேறு மருத்துவ வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் கூறுகையில், “இந்தியாவில் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதைத் தவிர்க்க முடியாது. ஆதலால், தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் சதவீதம் அதிகரிக்காதவரை மூன்றாவது அலையைத் தவிர்ப்பது கடினம். மூன்றாவது அலையில் கரோனா வைரஸ் குழந்தைகளைக் குறிவைக்கும் எனப் பல்வேறு மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3-வது அலை இந்தியாவில் உருவாகலாம். ஆதலால், மத்திய அரசுக்கு நான் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
முதலாவதாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவையையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இதுவரை குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படவில்லை. பைஸர், மாடர்னா தடுப்பூசிகள் 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்கு வழங்கலாம் என அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.